சென்னை (29 மே 2020): தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் தொடர்ந்து 2-வது நாளாக கொரோனா பாதிப்பும், பலி எண்ணிக்கையும் உச்சம் தொட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு நேற்று ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாகப் பரவிவருவது, மக்களிடையே மிகுந்த அச்சத்தையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று, ஒரே நாளில் 827 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 19 ஆயிரத்து 372-ஆக உயர்ந்துவிட்டது.
சென்னையில் பிறந்து 6 நாட்களே ஆன குழந்தைக்கும், திண்டுக்கல்லில் பிறந்து 10 நாட்களே ஆன குழந்தைக்கும், திருவண்ணாமலையில் 10 மாத குழந்தைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் 3-வது முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 800-ஐ தாண்டி பதிவாகியுள்ளது. கடந்த 25-ம் தேதி 805 பேருக்கும், நேற்று முன்தினம் 817 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தமிழகத்தில் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 827 பேரில் 559 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து, சென்னை நகரில் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 762-ஆக உயர்ந்துள்ளது. அதாவது, தமிழ்நாட்டின் மொத்த பாதிப்பில் மூன்றில் 2 பங்கு சென்னையில் காணப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தில் மேலும் 12 பேர் நேற்று உயிரிழந்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து, பலி எண்ணிக்கை 145-ஆக அதிகரித்துள்ளது.