சென்னை (07 ஜன 2020): ஆபாச வீடியோவைக் காட்டி 13 வயது சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட 68 வயது அதிமுக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை வண்ணாரப்பேட்டை மாடர்ன் லைன் பகுதியை சேர்ந்தவர் பாளையம் என்கின்ற ரவி… 68 வயதாகிறது.. இவர் அதிமுக பிரமுகர் ஆவார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அதிமுக எம்ஜிஆர் மன்ற 52வது வட்ட தலைவராகவும் இருந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியை தன் வீட்டின் மொட்டை மாடிக்கு அழைத்து சென்று.. செல்போனில் வைத்திருந்த ஆபாச வீடியோக்களை காண்பித்து பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இது சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
உடனே ஹெல்ப்லைன் எண்ணில் இருந்து தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் போலீசுக்கு அந்த புகார் அனுப்பப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மகளிர் போலீசார் ரவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் போலீசார் கைது செய்து ஜார்ஜ் டவுன் கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர்.
அதிமுக பிரமுகர் என்பதால் வெளியே வந்துவிடுவார் என்பதால் அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் கல்லறை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் உறவினர் மற்றும் பொதுமக்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தி, ரவி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மேலும் ரவி இதுபோன்று தொடர்ந்து அச்சிறுமியிடம் பல மாதங்களாக தொந்தரவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.