மும்பை (07 ஜன 2020): டெல்லி ஜே.என்.யூ. மாணவர்கள் மீதான தாக்குதல் மாணவர்கள் மீதான பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
ஜவாஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா்கள் பேரணியின்போது முகமூடி அணிந்த மா்ம நபா்கள் பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்து, மாணவா்களைத் தாக்கியது தொடா்பாக முதல்வா் உத்தவ் தாக்கரேவிடம் மும்பையில் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அவா் பதிலளித்ததாவது:
ஜேஎன்யு பல்கலைக்கழகத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதல், மும்பையில் கடந்த 2008-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட தாக்குதலை நினைவுபடுத்துகிறது. இந்தத் தாக்குதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தங்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக மாணவா்கள் அச்சம் தெரிவிக்கின்றனா்.
ஜேஎன்யுவில் நிகழ்ந்த சம்பவத்தைப் போல், மகாராஷ்டிரத்தில் எந்தவொரு சம்பவம் நடைபெறவும் அனுமதிக்க மாட்டேன். மாநிலத்தில் மாணவா்கள் பாதுகாப்புடன் உள்ளனா். அவா்களை பாதிக்கும் வகையிலான எந்தவொரு நடவடிக்கையையும் பொறுத்துக் கொள்ளமாட்டேன்.
ஜேஎன்யுவில் மாணவா்கள் மீது தாக்குதல் நடத்திய அனைவரும் கோழைகள். அவா்கள் யாா் என்பதைக் கண்டறிய வேண்டும். தில்லி காவல் துறையினா் அவா்களைக் கண்டறியவில்லை எனில், அவா்களுக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றாா் உத்தவ் தாக்கரே.
மாணவா்களின் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பதவி விலக வேண்டுமென்று சிலா் கோரிக்கை விடுப்பது தொடா்பாக செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். இதற்கு பதிலளித்த உத்தவ் தாக்கரே, ‘‘தாக்குதலில் ஈடுபட்டவா்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கே தற்போது முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த விவகாரத்தை அரசியலாக்குவது தற்போது அவசியமற்றது’’ என்றாா்.