திருச்சி (27 ஜன 2020): திருச்சியில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் இன்று (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதற்கிடையே அதே பகுதியை சேர்ந்த “மிட்டாய் பாபு” என்பவர் இந்தக் கொலையை செய்ததாக தெரிய வந்திருக்கிறது.
முன்விரோதம் காரணமாக ஏற்கனவே 2 முறை விஜயரகு மீது கொலை முயற்சி நடைபெற்றுள்ளது. காந்தி சந்தை காவல் நிலையத்திலும் பாபு மீது புகார் அளித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து அண்மையில் பிணையில் வந்துள்ளார் மிட்டாய் பாபு என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நிலையில், விஜயரகுவின் சடலம் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் பா.ஜ.க-வினர் திரண்டு வருகின்றனர். இதன் காரணமாக 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கொலையாளிகளை கைது செய்யக் கோரி பாஜக.வினர் திருச்சி அரசு மருத்துவமனை முன்பு மறியல் செய்தனர். இன்று இரவுக்குள் குற்றவாளிகளை கைது செய்வதாக போலீஸார் உறுதி கொடுத்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் இந்தக் கொலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.