சென்னை (07 அக் 2022): தமிழக அரசியலில் சமீபத்தில் புயலை கிளப்பி வருபவர் விசிக தலைவர் திருமாவளவன்
திமுக கூட்டணியில் இருந்தாலும், திமுகவை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார். கடந்த 2 ஆம் தேதி நடைபெறவிருந்த ஆர் எஸ் எஸ் பேரணியை தடுத்து நிறுத்தியதில் திருமாவின் பங்கு மிக முக்கியமானது. எனினும் திருமா தலைமையில் நடைபெறவிருந்த சமூக நல்லிணக்க பேரணிக்கு தடை விதிக்கப்பட்டதற்கு அரசை விமர்சித்திருந்தார் திருமா.
இந்நிலையில் அடுத்த மாதம் 6ம் தேதி தமிழகத்தில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பேரணிக்கு எதிராக, வரும் 11ல் தமிழகம் முழுதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்ச்சியை, வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்துகின்றன.அதேபோல் மத்திய அரசையும், தமிழக கவர்னரையும் கண்டித்து, சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், வி.சி., மற்றும் தமிழக வாழ்வுரிமை கட்சி, மற்றும் இஸ்லாமிய கட்சிகள் பங்கேற்றன.
இதற்கிடையே பா.ஜ க மற்றும் காங்கிரசுக்கு எதிராக, மாநில கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் முயற்சியில், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாரத் ராஷ்டிரிய சமிதி என்ற புதிய கட்சியை துவக்கி உள்ளார்.தெலுங்கானாவில் நடந்த அதன் துவக்க விழாவில், தி.மு.க., சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. ஆனால், வி.சி., தலைவர் திருமாவளவன் பங்கேற்றுள்ளார்.
அப்போது, பிற மாநில தலைவர்களிடம் திருமாவளவனை, சந்திரசேகர ராவ் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.இதனால் திருமாவளவன், சந்திரசேகர ராவ் தலைமையில் உருவாகும் அணியில் இடம்பெற விரும்புகிறார் என்பதையும், அதோடு சிறுபான்மையினரின் ஆதரவையும் திருமா பெற்றுள்ளதால் ஓட்டு வங்கி பாதிக்கப்படால்ம் என்று திமுக கலக்கத்தில் உள்ளது. இந்நிலையில் விசிக திமுக கூட்டணியை விட்டு விலகிவிடலாம் என திமுக கருதுகிறது.