சென்னை (02 மே 2020): தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவில் இன்று ஒரே நாளில் புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நேற்று 203 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று புதிதாக 231 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,757 அதிகரித்துள்ளது.
மேலும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் தமிழகத்தில் இன்றுவரை 1,341 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் 1,384 பேர் கொரோனா பாதிப்புக்கு மருத்துவனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்று காரணமாக சென்னையை சேர்ந்த 76 வயது நபர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மே 1-ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு உயிரிழந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1257 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.