தஞ்சாவூர் (31 ஜன 2020): தஞ்சை பெரிய கோவிலில் வரும் 5ம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதனை தமிழ் ஆகம விதிப்படி நடத்த வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கு மீது நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு தீர்ப்பு வழங்கியது.
அதில் உயர்நீதிமன்றத்தில் இந்து சமய அறநிலையத்துறை கூறியபடி தமிழ் மற்றும் சமஸ்கிருதம் என இரு ஆகம விதிகளின் படியே குடமுழுக்கு நடைபெறும் என உத்தரவிடப்பட்டது.
குடமுழுக்கு முடிந்தவுடன், நீதிமன்றத்தில் உறுதி கூறியபடிதான் விழா நடந்ததா? என்பது குறித்த விரிவான அறிக்கையை 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தான கோவில் நிர்வாகதிற்கு உத்தரவிட்டனர்.
இதனிடையே தஞ்சை பெருவுடையார் கோவிலில் குடமுழுக்கை முன்னிட்டு பூர்வாங்க பூஜைகள் தொடங்கி 5 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இது வரை நடைபெற்ற அனைத்து சிறப்பு பூஜைகளும் சமஸ்கிருதத்தில் மட்டுமே நடைபெற்றுள்ளன. நாட்டின் பல்வேறு புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் வெண்ணாங்கரையில் உள்ள தஞ்சை புரீஸ்வரர் கோவிலில் வைத்து சமஸ்கிருத்தில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து அங்கிருந்து தப்பாட்டம் கோலாட்டம், முளைப்பாரியுடன் ஊர்வலமாக வந்த புனித நீர், பெரிய கோவிலை அடைந்தது.
இதேபோல் நீதிமன்ற தீர்ப்புக்கு முன்னதாக இன்று நடைபெற்ற கோ பூஜை, அஸ்வத பூஜை ஆகியவையும் சமஸ்கிருதத்திலேயே நடத்தப்பட்டன. யாகசாலை பூஜைகள் நாளை தொடங்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.