ஜெயலலிதாவின் வேதா இல்லம் எங்களுக்கே சொந்தம் – தீபா கொந்தளிப்பு!

Share this News:

சென்னை (24 மே 2020): முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா இல்லம் நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்ததற்கு அவரின் அண்ணன் மகள் தீபா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை போயஸ் கார்டனில் உள்ள வேதா இல்லம் மறைந்த முன்னாள் முதலமைச்சரின் வாழ்ந்து மறைந்த வீடாகும். இதனை நினைவில்லமாக மாற்ற தமிழக அரசு சமீபத்தில் அவசர சட்டம் பிறப்பித்தது. இதனை மேற்பார்வை செய்ய அறக்கட்டளை ஒன்றை ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன் தலைவராக முதலமைச்சர் பழனிசாமி இருப்பார். துணை முதலமைச்சர் மற்றும் தகவல்தொழில்நுட்ப அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தீபா, ” மெரினா கடற்கரையில் மிகப்பெரிய அளவில் ஜெயலலிதாவிற்கு நினைவுச் சின்னம் எழுப்பப்பட்டு வருகிறது. எனவே வேதா இல்லத்தை எதற்காக அரசு கையகப்படுத்தி நினைவில்லமாக மாற்ற வேண்டும்.

இந்த இல்லத்தில் என்னென்ன பொருட்கள் இருக்கின்றன என்று யாருக்கும் தெரியாது. ஜெயலலிதாவின் சொத்துகளை அவர்களது உறவுகளுக்கு ஒப்படைப்பது தானே நீதியாக இருக்கும். நானும், எனது சகோதரனும் வேதா இல்லத்தை நன்றாக பார்த்துக் கொள்வோம்.

அதுவும் அவசர சட்டம் இயற்றி ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை நினைவில்லமாக மாற்ற என்ன அவசரம் ஏற்பட்டுள்ளது. நாடு தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்டுள்ள இக்கட்டான சூழலில் இருக்கிறது. இதை கவனிப்பதை விட்டுவிட்டு அரசுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை.

வேதா இல்லத்தை நாங்கள் மீட்பதற்கு அதிமுக தொண்டர்களின் உதவி தேவைப்படுகிறது. அனைவரும் சேர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை மீட்டு எடப்பாடி பழனிசாமியோ அல்லது ஓ.பன்னீர்செல்வமோ அல்லது வேறெந்த அதிகாரிகளோ ஒரு செங்கலை கூட தொட முடியாத அளவு பார்த்துக் கொள்ள எங்களுடன் துணை நிற்க வேண்டும்.

நீதிமன்ற உத்தரவுப்படி போயஸ் கார்டன் இல்லத்தில் உள்ள ஜெயலலிதாவின் துணிகள், நகைகள், புத்தகங்கள், உபயோகப் பொருட்கள், கார்கள் உள்ளிட்டவற்றை சட்டரீதியான வாரிசுகள் ஆய்வு செய்யும் வரை எந்தவித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஆளுநரிடம் விரைவில் மனு ஒன்றைக் கொடுத்து அத்தையின் சொத்துக்கள் சட்டரீதியான வாரிசுகளாகிய எங்களுக்கு வந்து சேர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுப்போம் என்றார்.


Share this News: