திருச்சி (24 ஜன 2020): திருச்சியில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவருக்கு நீதிபதி புதுவிதமான தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
திருச்சி கே.கே நகரைச் சேர்ந்த பாலமுருகன் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது சகோதரர் மற்றும் நண்பர்கள் ஐந்து பேருடன் மதுபோதையில் வாகனத்தை ஓட்டினார். இவரை போக்குவரத்து போலீசார் பிடித்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் அபராதமும் விதித்தனர்.
2018-ஆம் ஆண்டு பாலமுருகனுக்கு 17 வயது என்பதால் இளம் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பயிற்சி வகுப்பில் பங்கேற்கவும் அறிவுறுத்தப்பட்டது. இந்த வழக்கில் தீர்வு எட்டப்பட்டு நீதிபதி ஷகிலா, பாலமுருகனுக்கு புதுவித தண்டனையை வெள்ளிக்கிழமை வழங்கினார்.
அந்த உத்தரவின்படி ஜன.24 மற்றும் 25 ஆகிய இருநாள்கள் திருச்சி நீதிமன்றம் அருகே எம்.ஜி.ஆர் சிலை ரவுண்டானா பகுதியில் போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டு மாநகர காவல்துறையுடன் இணைந்து போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதன் அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
சாலைப் பாதுகாப்பு வார விழா கொண்டாடி வரும் சூழலில் இந்த நீதிபதி வழங்கிய இந்த புதுவித தண்டனை வரவேற்பை பெற்றுள்ளது.