சென்னை (05 மே 2020): தமிழகத்தில் வரும் 7-ம் தேதி டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அன்று கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஊரடங்கு உத்தரவு, மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதன்படி, சில கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் நிபந்தனைகளுடன் வரும் 7-ம் தேதி முதல் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை அடுத்து தமிழகத்தில் மதுபானக் கடைகளை வரும் 7-ம் தேதி முதல் திறக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகள் திறக்கப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் சென்னை மாநகரக் காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் ஏழாம் தேதி, டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கு கடைகள் திறக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.