நெய்வேலி (07 பிப் 2020): நெய்வேலியில் உள்ள என்எல்சி நிறுவனத்திற்குள் நடிகர் விஜய்-யைக் காண வந்த ரசிகர்கள் மீது, மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதி ரணகளமானது.
“மாஸ்டர்” திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்து வருகிறது. இதில் நடிகர் விஜய் நடித்து வருகிறார்.
கடந்த 5-ஆம் தேதி, “மாஸ்டர்” படப்பிடிப்பு தளத்தில் இருந்து விசாரணைக்காக நடிகர் விஜய்-யை சென்னைக்கு அழைத்துச் சென்றனர், வருமான வரித்துறையினர்.
பல மணி நேர விசாரணைக்கு பின்னர் விடுவிக்கப்பட்ட அவர், காலை நெய்வேலி என்எல்சி நிறுவன வளாகத்தில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
மாலையில் படப்பிடிப்பு முடிந்த பிறகு நுழைவு வாயிலில் காத்திருந்த ரசிகர்களை நோக்கி விஜய் கையை அசைத்தார். உற்சாகம் அடைந்த ரசிகர்கள் என்எல்சி நிறுவனத்திற்குள் நுழைய முயன்றதை அடுத்து அவர்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் தடியடி நடத்தி விரட்டினர்.
முன்னதாக என்எல்சி சுரங்கத்தில் மாஸ்டர் படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் சுரங்கத்தின் வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பாதுகாக்கப்பட்ட பகுதியில் எப்படி படப்பிடிப்பை நடத்தலாம் என அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ரசிகர்கள் மீது தடியடி நடத்திய போலீஸார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப் படுத்தியது குறிப்பிடத் தக்கது.