வயிறு எரியுது – ராமதாஸ் வேதனை!

Share this News:

சென்னை (21 ஜன 2020): பொங்கல் அன்று மது விற்பனை 605 கோடிக்கு விற்பனை நடைபெற்றதை நினைத்து தனது “வயிறு எரிவதாக” பாமக தலைவர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், “இதுவரை இல்லாத அளவுக்கு பொங்கல் திருநாளில் ரூ.605 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி கேட்டதும் எனது வயிறு வேதனையில் எரிகிறது. குடித்தவனின் வயிறு அமிலத்தால் எரியும். அவன் குடும்பத்தின் வயிறு உணவின்றி பசியால் எரியும். இந்த அவலம் என்று தீரும்?” என்று எழுதியுள்ளார். மேலும்…

“தமிழ்நாட்டில் பொங்கல் விழாவின் 3 நாட்களில் ரூ. 605 கோடிக்கு மது விற்பனை: செய்தி – கரும்பு விற்பனையாகவில்லை… இஞ்சி, மஞ்சள் கொத்துகளை வாங்க ஆள் இல்லை. மதுக்கடைகளில் மட்டும் மாநாட்டுக் கூட்டம். தமிழன் என்றொரு இனமுண்டு… தனியே அவர்க்கொரு குணமுண்டு என்பார்களே…. அது இது தானோ? என்றும், தமிழ்நாட்டில் பொங்கல் விழாவையொட்டி ரூ.605 கோடிக்கு மது விற்பனை. வரலாற்று சாதனையாம். ஆஹா…. இதுவரை தமிழ்நாட்டு குடிமகன்கள் குடிப்பதில் சாதனைகளை மட்டும் தான் படைத்துக் கொண்டிருந்தார்கள்.

மேலும் இப்போது வரலாற்று சாதனை படைத்திருக்கிறார்களாம். அடக் கொடுமையே? என்றும், பொங்கல் திருநாளில் புதுப்பானையில் புத்தரிசியும், பாலும் கலந்து பொங்கல் தான் பொங்கும். ஆனால், இந்த பொங்கலுக்கு குடிமகன்களின் வயிற்றில் சாராயம் தான் பொங்கியிருக்கிறது. முதல் பொங்கல் வயிற்றை நிறைக்கும். இரண்டாவது பொங்கல் வயிற்றை அரிக்கும். தமிழா நீ மதுவை கைவிட்டு தலைநிமிர்வது எந்நாளோ?” என்றும் கருத்து கூறியுள்ளார் பாமக தலைவர் ராமதாஸ்.

பொங்கலுக்கு டாஸ்மாக் வருமானம் இத்தனை கோடிகள் என்று அரசு அதிகாரிகளை நிர்பந்தித்து விற்பனை செய்யும் ஆளும் அதிமுக-வுடன் கூட்டணி வைத்துக் கொண்டே, டாஸ்மாக் விற்பனைக்கு எதிராக ராமதாஸ் புலம்புவது நகைப்புக்குரியது என நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.


Share this News:

Leave a Reply