5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் – சிறப்பு வகுப்புகளுக்கு உத்தரவு!

Share this News:

சென்னை (29 ஜன 2020): பொதுத் தேர்வை முன்னிட்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினம் 1 மணிநேரம் சிறப்பு வகுப்பு நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

8-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்ற அடிப்படையில் இதுவரை பள்ளிகள் நடைபெற்று வந்தனர். ஆனால் மத்திய அரசு அமைத்திருந்த கஸ்தூரிரங்கன் தலைமையிலான தேசியக் கல்விக்கொள்கை வடிவமைப்புக் குழுவின் வரைவு அறிக்கையும் கடந்த ஆண்டு வெளியானது. அந்த அறிக்கையில் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்று அந்தக் குழு பரிந்துரை செய்திருந்தது. இதனையடுத்து, மத்திய அரசின் கல்வித்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த முடிவு செய்து சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இந்த நடைமுறையை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநிலங்களே முடிவு செய்து கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இதையடுத்து பல்வேறு மாநிலங்கள் இந்த புதிய சட்டத்தை அமல்படுத்தி உள்ளன. தொடர்ந்து, நடப்புக் கல்வியாண்டு முதல் 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கு எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இம்முடிவில் தற்போதைக்கு மாற்றம் இல்லை என அரசு அறிவித்துவிட்டது.

இந்நிலையில், அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தொடக்க கல்வி இயக்குநர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், பொதுத்தேர்வு எழுதவுள்ள 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள் முதல் வெள்ளி வரை மாலை வேளைகளில் ஒரு மணி நேரம் ஒதுக்கி சிறப்பு வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 30 மதிப்பெண்களுக்கு முதல் இரண்டு பருவங்களில் மாதிரி வினாத்தாள் தயார் செய்து தினமும் தேர்வுகள் நடத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துடன், சிறிய குழந்தைகளுக்கு மிகப்பெரும் மன அழுத்தம், நெருக்கடி தருவதாக குற்றச்சாட்டியுள்ளனர்.


Share this News:

Leave a Reply