சென்னை (27 ஜன 2020): டி.ஆர் பாலுவின் நடவடிக்கைகளால், திமுக தலைமை அதிருப்தியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருக்கும் டி.ஆர்.பாலு, தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகவும் இருந்தார். ஆனால் இரு பதவிகளில் இருப்பது சரியானதல்ல என்று கே.என்.நேருவுக்கு அறிவாலயப் பதவி கொடுக்கப்பட்டது.
மேலும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் பதவியை திமுகவுக்கு வழங்க பாஜக முன்வந்துள்ளது. ஆனால் அதனை ஏற்க ஸ்டாலின் தயாராக இல்லை.
காரணம், ஏற்கெனவே பி.ஜே.பி அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் வரும் நாள்களில் கொண்டு வரப்போகும் பொது சிவில் சட்டம் உள்ளிட்டவற்றைக் கடுமையாக எதிர்க்கும் நிலையில் திமுக இருப்பதால் துணை சபாநயகர் பதவி இதற்கு முட்டுக் கட்டையாக இருக்கும் என்பது ஸ்டாலினின் கருத்து. ஆனால் டி.ஆர் பாலு பிடிவாதமாக இருப்பதாக தெரிகிறது. இதனால் ஸ்டாலின் படு அப்செட்டில் உள்ளாராம்.
ஏற்கனவே குடியுரிமை திருத்தச் சட்ட வாக்கெடுப்பின்போது கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததாகவும் செய்தி வந்தது. அதற்கு டி.ஆர் பாலுதான் காரணம் என்றும் கூறப்பட்டது. ஆனால் அதனை கனிமொழி எம்.பி மறுத்ததும் குறிப்பிடத்தக்கது.