ஆளுநர் சட்டமன்ற மரபுகளையே மீறிவிட்டார் – முதல்வர் ஸ்டாலின்!

Share this News:

சென்னை (09 ஜன 2023): ஆளுநருக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நடந்து கொண்டோம், எங்கள் கொள்கைக்கு மட்டுமல்ல, அரசின் கொள்கைகளுக்கே மாறாக கவர்னர் நடந்து கொண்டார் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் கவர்னர் ஆர்.என். உரையின் மீதான தீர்மானத்தினை முன்மொழிந்து சட்டமன்றப் பேரவையில் ஆற்றிய உரையில் கூறியதாவது:

கவர்னர் அவர்களுக்கு வரைவு உரையானது, தமிழ்நாடு அரசாங்கத்தால் ஏற்கெனவே அனுப்பப்பட்டு, அவரால் ஏற்பளிக்கப்பட்டு, அதன்பின்னர் அச்சடிக்கப்பட்டு இன்றைக்கு அனைத்து உறுப்பினர்களுக்கும் கணினியிலும், தேவைப்படும் உறுப்பினர்களுக்கு அச்சிட்ட பிரதிகளாகவும் வழங்கப்பட்டுள்ளன.

நம்முடைய திராவிட மாடல் கொள்கைகளுக்கு முற்றிலும் மாறாக செயல்பட்டு வரும் கவர்னர் அவர்களுடைய செயல்பாடுகள், முற்றிலும் ஏற்றுக்கொள்ள இயலாத நிலையில், அரசின் சார்பாக இருக்கின்ற காரணத்தால், நாங்கள் சட்டமன்றப் பேரவை விதிகளைப் பின்பற்றி கவர்னர் உரையைத் தொடங்குவதற்கு முன்னர் எங்களது எதிர்ப்பு எதனையும் நாங்கள் பதிவு செய்யவில்லை.

பேரவையிலே மிகவும் கண்ணியத்தோடு, அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உரையாற்ற வந்துள்ள கவர்னர் அவர்களுக்கு முழு மரியாதை அளிக்கும் வகையில் நாங்கள் நடந்து கொண்டோம். ஆனாலும், எங்களது கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்ல – அரசின் கொள்கைகளுக்கே கூட அவர் மாறாக நடந்து கொண்டு, தமிழ்நாடு அரசு தயாரித்து, கவர்னர் அவர்களால் இசைவளிக்கப்பட்டு, அச்சிடப்பட்ட உரையை முறையாக முழுமையாகப் படிக்காதது மிகவும் வருந்தத்தக்கது மட்டுமல்ல, சட்டமன்ற மரபுகளை மீறிய ஒன்றும் ஆகும்.

ஆகவே, சட்டமன்றப் பேரவை விதி 17-ஐத் தளர்த்தி, இன்றைக்கு அச்சிடப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஆங்கில உரை மற்றும் பேரவைத் தலைவர் அவர்களால் படிக்கப்பட்ட தமிழ் உரை ஆகியன மட்டும், அவைக்குறிப்பில் எனும் தீர்மானத்தையும், அதேபோல, இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக கவர்னர் இணைத்து, விடுத்து படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தையும் முன்மொழிகிறேன்.

இத்தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.


Share this News:

Leave a Reply