திருச்சி மாநாட்டில் திருமாவளவன் திமுக மீது மறைமுக பாய்ச்சல்!

Share this News:

திருச்சி (23 பிப் 2020): விடுதலை சிறுத்தைகள் கட்சி விரைவில் கோட்டையில் கொடியேற்றும் என்றும் திமுகவுக்கு பல மெஸேஜ்களையும், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நேற்று நடைபெற்ற தேசம் காப்போம் என்ற பெயரில் குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களை கண்டித்து தேசம் காப்போம் என்ற பெயரில் நேற்று திருச்சியில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

அதில் பேசிய திருமாவளவன், திமுகவுக்கு பல மறைமுக மெஸேஜ்களை தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சியை வெறுமனே கோஷம் போடும் கட்சியாக மட்டும் இனி எந்த கட்சியும் நினைக்க வேண்டாம் என்றும், கோட்டையில் கொடியேற்றும் கட்சியாக மாறி வருவதாகவும் பேசி திருமா மேலும் பல கட்சிகளுக்கு பீதியை கிளப்பியுள்ளார்.

வரும் 2021 சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக யார் வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான், என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்திருப்பது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு இடங்களில் போட்டியிட்டு வென்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி இப்போது வரை அதே கூட்டணியில் தான் இருந்துவருகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திருமாவளவன் சந்தித்து பேசியதும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இதற்கிடையே எடப்பாடியை திருமா சந்தித்தது திமுகவுக்கு பிடிக்கவில்லை என தெரிகிறது. இதனால் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ. அன்பழகன், நம்முடன் கூட்டணி வைத்துக்கொண்டு முதல்வரை சந்தித்து சிலர் பேசிகிறார்களா, அவர்களை கழற்றி விட வேண்டும் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இடஒதுக்கீடு தொடர்பாக தெரிவித்த கருத்தும் திருமாவளவனை கடுமையாக கோபப்படுத்தியுள்ளது.

ஆனால் இதற்கு முதலில் விசிக எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை. அவை அனைத்தையும் மொத்தமாக வைத்து திருமாவளவன் நேற்று திருச்சியில் தனது உள்ள குமுறலை கொட்டி தீர்த்துள்ளார். ஆர். எஸ் பாரதிக்கு நேரிடையாகவே பதிலடி கொடுத்த திருமா, தாழ்த்தப்பட்டவர்கள் நீதிபதியானது யார் போட்ட பிச்சையும் இல்லை என்றும், அம்பேத்கர் வடித்த சட்டத்தால் தான் எனவும் தெரிவித்தார்.

தமிழக முதல்வராக யார் வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தி நாங்கள் தான் என்றும், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவின்றி யாரும் முதல்வராக வர முடியாது எனவும் தெரிவித்துள்ளார். திருமா தனது பேச்சில் வெளிப்படையாக திமுகவை சுட்டிக்காட்டாவிட்டாலும் கூட, இது மு.க.ஸ்டாலினுக்கும், திமுக நிர்வாகிகளுக்கும் திருமா கூறியுள்ள மறைமுக மெசேஜ் எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *