பிரிட்டன் (23 மார்ச் 2020): பிரிட்டனில் கொரோனாவுக்கு 18 வயது வாலிபர் பலியாகியுள்ளார்.
எல்லைகளைக் கடந்த சவாலாக மாறி மனித குலத்தையே அலற வைத்துக் கொண்டிருக்கும் கரோனா வைரஸால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கரோனாவைக் கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகளில் பெரும்பாலானவை திணறிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் 18 வயதுள்ள ஒருவர் உயிரிழந்தார். பிரிட்டனில் கரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 281 ஆக உயர்ந்துள்ளது.
நாட்டிலேயே மிகவும் குறைந்த வயதில் கரோனாவுக்குப் பலியானவர் இவர். பிரிட்டனில் கடந்த ஆறு நாள்களில் மேலும் 5,683 பேருக்கு வைரஸ் தொற்றியிருப்பது அறியப்பட்டுள்ளது.
வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தேவையில்லாமல் வெளியே செல்ல வேண்டாம் என்று மக்களை பிரிட்டிஷ் அரசு கேட்டுக்கொண்டிருக்கிறது. எனினும், பரவல் தொடருகிறது.