சிங்கப்பூர் (13 மார்ச் 2020): சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலகில் எந்த நாட்டையும் விட்டு வைக்காமல் அதி வேகத்தில் பரவி வருகிறது. இந்நிலையில் பல நாடுகள் கொரோனா பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
அந்த வகையில் சிங்கப்பூரில் உள்ள அனைத்து மசூதிகளும் 5 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளன. மேலும் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை கூட அங்கு நடைபெறவில்லை.
இதுகுறித்து மஜ்லிஸ் உகாமா இஸ்லாம் சிங்கப்பூரா (MUIS) என்ற சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த பிப்ரவரி 27 முதல் மார்ச் 1 வரை மலேசியாவின் கோலாலம்பூரில் 10 ஆயிரம் பேர் பங்கு பெற்ற தப்லீக் இஜ்திமாவில் பங்கு கொண்ட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்த இஜ்திமாவிற்கு சென்ற சிங்கப்பூரை சேர்ந்தவர்கள் இருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளதை சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் உறுதி செய்துள்ளது, மேலும் மலேசியா இஜ்திமாவிற்கு சென்ற பலர் சிங்கப்பூரின் பல மசூதிகளுக்கு சென்றிருப்பது தெரிய வந்துள்ளதால், சிங்கப்பூரின் அனைத்து மசூதிகளையும் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக சுத்தம் செய்வதால், ஐந்து நாட்களுக்கு அனைத்து மசூதிகளும் மூடப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.