அமெரிக்காவையும் தாக்கியது கொரோனா வைரஸ்!

Share this News:

நியூயார்க் (29 பிப் 2020): கொரோனா வைரஸ் நோயால் அமெரிக்காவில் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவில் மட்டும் கொவைட்-19 வைரஸ் காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,835 ஆக சனிக்கிழமை உயா்ந்துள்ளது. இதுவரை சீனா முழுவதும் கொவைட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 79,251-க்கும் அதிகமாக உயா்ந்துள்ளது.

ஈரானிலும் கொவைட்-19 வைரஸ் காரணமாக 245 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 26 பேர் உயிரிழந்தனர். இதனால் ஐரோப்பிய நாடுகளில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து சென்றவர்களால் பரவிய நோய் தொற்று காரணமாக பஹ்ரைனில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென் கொரியாவில் தற்போது கொவைட்-19 பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 594 பேருக்கு நோய் பரவிய நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,931ஆக உயர்ந்துள்ளது. இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13ஆக உள்ளது.

அதுபோன்று இத்தாலியிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தற்போது வரை 650 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் இருந்து அல்கேரியா சென்றவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சுவிட்ஸர்லாந்திலும் 70 வயது முதியவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் தற்போது இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இத்தாலி பயணத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே மார்ச் 14ஆம் தேதி தெற்காசிய நாடுகளுடனான ஆசியான் கூட்டமைப்பு சந்திப்பை ஒத்திவைக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Share this News:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *