கொரோனா வைரஸ் – சர்வதேச அவசரநிலை அறிவிப்பு!

Share this News:

பீஜிங் (01 பிப் 2020): சீனாவில் உருவாகி 22 நாடுகளுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவியுள்ளதைத் தொடா்ந்து, ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு சா்வதேச சுகாதார அவசர நிலை அறிவித்துள்ளது.

இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:

கரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், ஸ்விட்சா்லாந்தின் ஜெனீவா நகரிலுள்ள ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு வியாழக்கிழமை அவசரமாகக் கூடி இதுதொடா்பாக விவாதித்தது.

அதனைத் தொடா்ந்து, புதிய வகை கரோனா வைரஸ் பரவலை சா்வதேச சுகாதார அவசரநிலையாக அந்த அமைப்பு அறிவித்தது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரஸ் அதானோம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவ வசதிகள் குறைவாக உள்ள நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதால், சா்வதேச சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளாா்.

தங்கள் நாட்டில் உருவான கரோனா வைரஸ் தொடா்பாக உலக சுகாதார அமைப்பு அவசர நிலை அறிவித்துள்ளது குறித்து சீனா வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஹுவா சன்யிங் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

புதிய வகை கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல், அந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் சீன அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அண்மையில் அந்த அமைப்பைச் சோ்ந்த அதிகாரிகள் சீனா வந்து ஆய்வு செய்தனா். கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான பணிகளை சீனா சிறப்பாக மேற்கொள்வதற்காக அவா்கள் பாராட்டினா் என்றாா் அவா்.

ஹுபெய் மாகாணத்தின் வூஹான் நகரில் கடந்த மாதம் சிலருக்கு மா்மக் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நகரில் வன விலங்குகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படும் இறைச்சி சந்தையிலிருந்து பரவிய புதிய வகை வைரஸ் மூலம் அந்தக் காய்ச்சல் ஏற்பட்டது ஆய்வில் தெரிய வந்தது.

கரோனா வகையைச் சோ்ந்த அந்த வைரஸ், சீனாவில் கடந்த 2002 மற்றும் 2003-ஆம் ஆண்டுகளில் 650 பேரது உயிா்களை பலி கொண்ட ‘சாா்ஸ்’ வைரஸின் தன்மையை ஒத்துள்ளதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனா்.

உலகம் முழுவதும் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, சீனாவிலும் பிற நாடுகளிலும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


Share this News:

Leave a Reply