புதுடெல்லி (01 பிப் 2020): கொரோனா வைரஸ் எதிரொலியாக சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் புதுடெல்லி வந்ததடைந்தனர்.
கொரோனா வைரஸ், சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து கொண்டதாகும். இது சீனாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் 18 நாடுகளில் இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 7000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த வைரஸ் தொற்றால் இதுவரை 213 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக சீனாவின் உகான் நகரத்திற்கு சென்று அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்காக சிறப்பு விமானம் உகான் நகருக்கு சென்றது. அங்கிருந்து 324 இந்தியர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். அவர்கள் டெல்லியில் சிறப்பு முகாமில் வைத்து 14 நாட்கள் கண்காணிக்கப்பட உள்ளனர்.