பார்சிலோனா (08 டிச 2022): வானில் பறந்த விமானத்தில் இருந்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு பிரசவ வலி என கூறியதை அடுத்து விமானம் தரையிறக்கப் பட்டது, ஆனால் அது நடிப்பு என தெரிய வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா விமான நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விமானம் தரையிறங்கியவுடன் பயணிகள் தப்பி ஓடிவிட்டனர். இதில் கர்ப்பிணி பெண் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்தனர். சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த மற்ற பயணிகளை தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மொராக்கோவில் இருந்து இஸ்தான்புல் சென்ற பெகாசஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த வியத்தகு நிகழ்வுகள் அரங்கேறின. விமானத்தை உடனடியாக பார்சிலோனாவில் தரையிறக்கும்படி பயணி கோரிக்கை விடுத்தார்.
விமானம் தரையிறங்கியதும், கர்ப்பிணிப் பெண்ணை கீழே இறக்குவதற்காக ஒரு ஆம்புலன்ஸ் மற்றும் மூன்று போலீஸ் ரோந்துகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதற்கிடையில், 28 பேர் கொண்ட கும்பல் தப்பி ஓடியது. கைது செய்யப்பட்டவர்களில் 5 பேர் இஸ்தான்புல்லுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.