டொராண்டோ (23 மார்ச் 2020): கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோபி கிரிகோயர், கொரோனா சிகிச்சை குறித்து பேசுவதாக போலி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோவின் மனைவி யையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டன் சென்று வந்த அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், வீடியோ ஒன்றில் பெண் பேசியதை, சிகிச்சையின் போது சோபி கிரிகோயர், கொரோனா சிகிச்சை குறித்து பேசுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்று வைரலானது. ஆனால், அந்த வீடியோ போலியானது.
உண்மையில் அந்த வீடியோவில் இருக்கும் பெண் டாரா லேன் லங்ஸ்டன்(39) என்பது தெரியவந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த பெண், லண்டன் மேற்கு பகுதியில் உள்ள ஹில்லிங்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் இருந்த போது, வீடியோ பதிவு செய்து, தனது நண்பர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பி உடல்நலனில் அக்கறை செலுத்தும்படி சொல்லும்படி கூறியுள்ளார். இதனை சிலர் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி பேசிய வீடியோ என தவறாக பரப்பி வருகின்றனர்.