ஜெனீவா (10 செப் 2020): ரோஹிங்கிய முஸ்லிம்களை கொன்று குவித்தது உண்மைதான் என்று அந்நாட்டு ராணுவ வீரர்கள் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகையே அதிர வைத்த சம்பவம் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலைகள். பல லட்சம் ரோகிங்யா முஸ்லிம்கள் அகதிகளாக குற்றுயிரும் குலை உயிருமாக நாடுவிட்டு நாடு ஓடிப்போனார்கள்.அப்படிப் போனவர்களில் மியான்மர் ராணுவத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டவர்கள் பல்லாயிரக்கணக்கானோர். இது தொடர்பாக திஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்த இனப்படுகொலை தொடர்பாக வழக்கு நடைபெற்று வருகிறது.
காம்பியா நாடு தொடர்ந்த இவ்வழக்கில் ஜனநாயகப் போராளியாக புகழப்பட்ட ஆன்சான் சூகி, போர்க்குற்றம் சுமத்தப்பட்ட அரசுக்காக அரசின் ஆலோசகராக நேரில் ஆஜரானது பல விமர்சனங்களை எதிர்கொள்ள வைத்தது.
இந்த நிலையில் மியான்மர் ராணுவத்தில் இருந்து தப்பி ஓடிய 2 ராணுவ வீரர்களின் ஒப்புதல் வாக்குமூலம் திஹேக் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், ரோகிங்யாக்களை கண்டதும் சுட்டுக் கொல்லவும் புதைத்துவிடவும் உத்தரவு வந்ததாகவும் அதனடிப்படையில் ரோகிங்யா முஸ்லிம்களை படுகொலை செய்ததாகவும் அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர்.
ராணுவ வீரர்களின் இந்த வாக்குமூலம் உலகை அதிர வைத்துள்ளது.