கத்தார் (15 ஜன 2023): உலகிலேயே சிறந்த வாழ்க்கைத் தரமும், மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய சூழ்நிலைகளும் கொண்ட நாடுகளின் பட்டியல் சற்றுமுன் வெளியாகியுள்ளது.
சர்வதேச அளவில் தர ஆய்வதில் உலகில் முன்னணி வகிக்கும் Numbeo நிறுவனம் இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. (இந்நேரம்.காம்)
உலகில் 142 நாடுகளை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட ஆய்வில் வெளியான இந்த பட்டியலில் கத்தார் நாடு முன்னணி வகிக்கிறது.
Numbeo எனும் பன்னாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் மற்றும் Crime Index by Country 2023 அடிப்படையில் கத்தார் நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த FIFA World Cup Qatar 2022 உலகக் கால்பந்து போட்டியில் சிறு குற்றச் செயலும் நிகழாமல் இருந்த பாதுகாப்பான சூழலும், பல்வேறு நாடுகளில் இருந்து பயணித்து கால்பந்து போட்டிகளைக் கண்டு களித்த குடும்பங்கள் மற்றும் தனியே பயணித்த பெண் ரசிகைகளின் நேர்காணல்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப் பட்டுள்ளன.
ஒரு நாட்டில் நிலவும் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், உறைவிடம், போக்குவரத்து சேவை போன்ற அடிப்படை வாழ்க்கை வசதிகளோடு ஒரு நாட்டில் நடைபெறும் குற்றங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த புள்ளிவிபரங்கள் தயாரிக்கப் படுகின்றன.
இந்த பட்டியலில் ஐக்கிய அரபு அமீரகம் இரண்டாவது இடத்திலும், தைவான் மூன்றாம் இடத்திலும் இடம் பெற்றுள்ளன. தொடர்ந்து ஓமன், பஹ்ரைன், ஹாங்காங், அர்மேனியா, ஜப்பான், ஸ்விட்சர்லாந்து போன்ற பல்வேறு நாடுகள் இடம் பெறுகின்றன.
தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் கத்தார் நாடு முதன்மையாக இடம் பெற்று வருவது குறிப்பிடத் தக்கதாகும்.