கொழும்பு (29 ஏப் 2020): சென்னையில் கடந்த ஒரு மாதமாக சிக்கித் தவித்துவரும் 160 இலங்கையர்களை சிறப்பு விமானம் மூலம் மீட்டு வர வேண்டும் என வெளி விவகார அமைச்சுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் வெளியுறவுத்துறை செயலாளர் ரவிநாத் ஆரியசிங்கேவுக்கு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
நாடு திரும்ப முடியாமல் சென்னையில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்கள் (சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள்) மன உளைச்சலுக்கும் பல்வேறு சிரமங்களுக்கும் உள்ளாகியிருக்கிறார்கள். வெளிநாடுகளிலிருந்து இலங்கையர்களை அழைத்துவருவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அண்மையில் மேற்கொண்டிருந்த முயற்சிகளுக்கு நன்றி.
சென்னையிலிருந்து வரமுடியாமல் தவிக்கும் இலங்கையர்களை அவ்வாறே அழைத்துவர சிறப்பு விமானப் பயண ஏற்பாடுகளைச் செய்யவேண்டும்.
அவ்வாறு அழைத்துவரும்போது, தேவையான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வதற்கும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துவதற்கும் அவசியமான நடவடிக்கைகளையும் உரிய அதிகாரிகள் மட்டத்தில் மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.