உலக அளவில் கொரோனா தாக்குதல் 31 லட்சம் – பலி இரண்டு லட்சத்துக்கும் மேல்!

Share this News:

நியூயார்க் (29 ஏப் 2020): சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்தது.

சீனாவின் வூஹான் நகரில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி, பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. வைரசின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில், உலக மக்களை, தனது அச்சத்தின் பிடியில் கொரோனா வைரஸ் தொற்று வைத்துள்ளது.

உலக அளவில், அமெரிக்காவில்தான் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்‍கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை 10 லட்சத்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 59 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

ஸ்பெயினில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 23 ஆயிரத்து 822-ஐ எட்டியுள்ளது. இத்தாலியில் 2 லட்சத்து ஆயிரத்து 505 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 27 ஆயிரத்து 359 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் பலி எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளன.

இந்நிலையில், இன்றைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31 லட்சத்து 48 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்து 18 ஆயிரத்தைக் கடந்துள்ளது. சர்வதேச அளவில் இதுவரை 9 லட்சத்து 62 ஆயிரத்துக்‍கும் மேற்பட்டோர் வைரஸ் தாக்‍கத்தில் இருந்து மீண்டுள்ளனர்.


Share this News: