லண்டன் (14 மார்ச் 2020): இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பரவலை வைத்து வியாபாரம் செய்த பள்ளிச் சிறுவனை பள்ளி நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.
இங்கிலாந்தின் லீட்ஸ் நகரைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஆலிவர் கூப்பர். அந்த நகரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறான். தினமும் காலையில் பள்ளிக்குக் கிளம்பும் முன் ரேடியோ கேட்பதை வழக்கமாக கொண்டிருக்கும் இந்த மாணவன், கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு செய்தியை ரேடியாவில் கேட்டுள்ளான்.
உடனே, மெடிக்கல் ஷாப்புக்கு சென்ற கூப்பர், 1.6 பவுண்ட் கொடுத்து (147 ரூபாய்), கிருமி நாசினி திரவ பாட்டிலை வாங்கியுள்ளான். அதனை பள்ளிக்கு கொண்டு சென்ற கூப்பர், “நான் சுயதொழில் ஒன்றை தொடங்கியுள்ளேன்; எல்லோரும் கிரவுன்ட்டுக்கு வாங்கன்னு” சக மாணவர்களை அழைத்துள்ளான்.
கூப்பரின் அழைப்பை ஏற்று, மைதானத்துக்குச் சென்ற அனைத்து மாணவர்களின் உள்ளங்கைகளில் சில துளிகள் கிருமி நாசினியை அளித்துவிட்டு, கைகளை நன்றாக கழுவும்படி அறிவுறுத்தியுள்ளான். அத்துடன், கிருமி நாசினிக்காக ஒவ்வொரு மாணவர்களிடம் தலா 50 பென்ஸை கூப்பர் வசூலித்துள்ளான். இப்படி ஒருநாளில் மட்டும் அந்த மாணவன், ஒன்பது பவுண்ட் (828 ரூபாய்) சம்பாதித்துள்ளான்.
இந்த விசயம், கூப்பரின் வகுப்பாசிரியர் மூலம் பள்ளி நிர்வாகத்துக்குத் தெரிய வந்தது. அதையடுத்து, கொரோனாவை வைத்து பள்ளி வளாகத்தில் வியாபாரம் செய்த குற்றத்துக்காக கூப்பரை பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.
“சக மாணவர்களுக்கு கிருமி நாசினி கொடுத்து, கொரோனா பாதிப்பிலிருந்து அவர்களை தன் மகன் காப்பாற்றியுள்ளான். அதற்காக அவன் மீது பள்ளி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது சரியா?” என்று ஆலிவர் கூப்பரின் தாய் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.