மாஸ்கோ (14 ஆக 2020): சில தினங்களுக்கு முன்னால் ரஷ்ய அதிபர் புதின் கொரோனா வைரசுக்கு எதிரான புதிய தடுப்பூசியை நாங்கள் கண்டுபிடித்துவிட்டோம் என்றும், அதைத் தன்னுடைய மகளுக்குச் செலுத்தி சோதனை செய்ததாகவும் அறிவித்தார்.
ஆனால் உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த ஆலோசகரான புருஸ் அய்ல்வர்ட் இது குறித்துக் கூறும் போது, “ரஷ்யாவின் தடுப்பூசி குறித்தான உறுதித்தன்மை மற்றும் நம்பகத்தன்மை குறித்து தற்போது எந்தத் தகவலும் கூற முடியாது. அது குறித்தான எந்த விவரமும் எங்களிடம் இல்லை. கரோனா தடுப்பு மருந்து உருவாக்கத்தில் மொத்தம் 9 கட்டமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அதில் எதிலும் ரஷ்யா அறிவித்துள்ள மருந்து இல்லை. இது குறித்தான முழு விவரங்களை அறிய தற்போது ரஷ்யாவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம்” என்றார்.
உலகெங்கும் கொரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து மக்களை அச்சுறுத்தக்கூடிய ஒன்றாக இருக்கிறது. நாள்தோறும் வெளியாகும் இறப்பு எண்ணிக்கை விவரங்கள் மக்களைப் பெரும் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபரின் அறிவிப்பு உலகெங்கும் கொரோனா பீதியில் உள்ள மக்களுக்குச் சற்று ஆறுதலாக அமைந்தது. இந்நிலையில் இந்தத் தடுப்பூசி குறித்து உலக சுகாதார நிறுவனம் கூறிய கருத்து மக்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.