திமுக முதன்மை செயலாளர் பதவி கே.என்.நேருக்கு வழங்கப்பட்டதால் திமுக மூத்த தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.
தலைமைக் கழக முதன்மைச் செயலாளராகப் பதவி வகித்து வரும் டி.ஆர்.பாலு, நாடாளுமன்றக் குழுத் தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதால் அவருக்குப் பதிலாகத் தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
இதையடுத்து, மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதியின் சமாதிக்குச் சென்றவருடன் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சேடப்பட்டி முத்தையா மகன் மணிமாறன், மதுரை மூர்த்தி உட்பட மூன்று பேர் மட்டுமே உடன் இருந்தனர். தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உட்பட தலைமைக் கழக நிர்வாகிகள் யாரும் உடன் செல்லவில்லை. அதேநேரம்,` தலைமைக் கழக முதன்மைச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டதில் கடும் கோபத்தில் இருக்கிறார் டி.ஆர்.பாலு’ என்கின்றனர் தி.மு.க வட்டாரத்தில். இந்தக் கோபத்தைப் பல்வேறு வழிகளில் அவர் காட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது இப்படியிருக்க நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அடிப்படையில் தி.மு.க தரப்புக்கு துணை சபாநாயகர் பதவியை வழங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை ஓடிக்கொண்டிருந்தது. `என்னை அந்தப் பதவிக்கு பரிந்துரை செய்யுங்கள்’ என டி.ஆர்.பாலு கேட்டிருக்கிறார். இதற்கு ஸ்டாலின் ஒப்புக்கொள்ளவில்லை. `குடியுரிமை சட்டத் திருத்தத்தைத் தொடர்ந்து பல்வேறு மக்கள் விரோத சட்டங்கள் இயற்ற மத்திய அரசு காத்திருக்கிறது அதனை எதிர்ப்பதற்கு தடுப்பாக இந்த பதவி அமைந்துவிடும் என்பது ஸ்டாலினின் கருத்து.
கட்சியில் ஒரு நல்ல பதவி வேண்டும் என நீண்டகாலமாகவே ஆசைப்பட்டார் நேரு. அதற்கேற்ப பதவியைக் கொடுத்துவிட்டார் ஸ்டாலின். அறிவாலயத்துக்கு நேரு வந்ததில் பொன்முடி, ஐ.பெரியசாமி, டி.ஆர்.பாலு உட்பட பலருக்கும் விருப்பமில்லை. இந்தப் பதவியை பொன்முடி மிகவும் விரும்பினார். எ.வ.வேலுவும் ஆசைப்பட்டார். இவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை.
ஒருபுறம் டி.ஆர் பாலுவின் எதிர்ப்பு மறுபுறம் மற்ற தலைவர்களின் அதிருப்தி எங்கு போய் முடியுமோ என அஞ்சுகின்றனர் உடன்பிறப்புக்கள்.