திருச்சி (27 ஜன 2020): திருச்சி பாஜக நிர்வாகி விஜயரகு படுகொலையின் பின்னணியில் மத பிரச்சனை காரணம் அல்ல என்று மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம் பாலக்கரை பகுதி பாஜக மண்டலச் செயலாளராக இருந்தவர் விஜய ரகு. இவர் திருச்சி காந்தி மார்க்கெட்டில் வாகன நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் பணியை செய்து வந்தார்.
இந்நிலையில் (27-ம் தேதி) காந்தி மார்க்கெட் வாசலில் ஒரு கும்பல் விஜய ரகுவை வெட்டிக் கொலை செய்தது. அக்கம்பக்கத்தினர் சுதாரிப்பதற்குள் அந்தக் கும்பல் தப்பிவிட்டது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அனுப்பி வைத்தனர். இந்தக் கொலை தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தினர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், வரகனேரியைச் சேர்ந்த மொபைல் லாட்டரி வியாபாரி மிட்டாய் பாபு என்பவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.
கொலையானவர் பாஜக நிர்வாகி என்பதால் பாஜக தலைவர்கள் மதரீதியிலான காரணத்தை முன் வைத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய மண்டல ஐ.ஜி.அமல்ராஜ், திருச்சியில் பாஜக நிர்வாகி விஜயரகு கொல்லப்பட்டது மதத்தின் அடிப்படையில் நடைபெற்றதல்ல. தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக விஜயரகு கொலை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் கொலை சம்பவத்தில் 3 பேர் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 5 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டு வருவதாக கூறினார்.