இனியும் இன்னொரு ஹிட்லர் வேண்டாம் – புதிய காந்திதான் வேண்டும்: ஹிந்த் அல் காசிமி!

Share this News:

துபாய் (23 ஏப் 2020): கோவிட் 19 உலகையே அச்சுறுத்திக் கொண்டு இருக்கும் நிலையில், இந்தியாவில் மட்டும் இந்த நோய் பரவ முஸ்லிம்கள்தான் காரணம் என்பதாக இந்துத்வா கொள்கை வாதிகளும், ஊடகங்களும் நச்சுக் கருத்துகளை பகிர்ந்து வருகின்றன.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்தது முதலே இந்திய முஸ்லிம்கள் அடைந்து வரும் சஞ்சலங்களையும், அடக்குமுறைகளையும் உலக நாடுகள் கண்டு கொண்டதாக தெரியவில்லை. ஆனால் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களிலும் இன்னும் சில ஊடகங்களிலும் இந்திய முஸ்லிம்களுக்கு ஆதரவாக குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

இதில் அரபிய நாடுகளின் அரச பரம்பரையை சேர்ந்த சிலரும், சில சமூக ஆர்வலர்களும், சமூக சிந்தனையாளர்களும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கு அடித்தளம் போட்டவர் ஐக்கிய அரபு அமீரக ராயல் குடும்பத்தை சேர்ந்த இளவரசி ஹிந்த் அல் காசிமி.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவ தப்லிக் ஜமாத்தினர்தான் காரணம் என்பதாக சங்பரிவார் அமைப்பு ஆதரவாளர்களும், இந்துத்வா, ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் கச்சைக் கட்டிக் கொன்டு போலி வீடியோக்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு பரப்பி வந்தனர்.

இந்நிலையில் அதனை தொடர்ந்து துபாயில் வசித்து வந்த இந்துத்வா சிந்தனையாளர் ஒருவரின் டிவிட்டர் பதிவில், முஸ்லிம்களுக்கு எதிராகவும், இந்திய முஸ்லிம்கள் மற்றும் முஸ்லிம் மத கோட்பாடுகளையும் விமர்சித்தும் பதிவிட்டிருந்தார். அது ஹிந்து அல் காசிமியின் கண்ணில் பட அதை வாசித்து அதிர்ச்சி அடைந்த ஹிந்த் அல் காசிமி, அதன் ஸ்கிரீன் ஷாட்டை இட்டு இந்தியாவில் என்ன நடக்கிறது? என்ற கேள்வியுடன் இட்ட ட்விட்டர் பதிவு வைரலானது.

அதனை தொடர்ந்து அவரது பதிவுக்கு பல அரபிய சமூக ஆர்வலர்கள் குரல் கொடுக்கும் விதமாக ரீ ட்விட் செய்து மேலும் ஆதரவளித்தும் பதிவிட்டு இருந்தனர்.

அதுமட்டுமல்லாமல், அரபு நாடுகளில் முஸ்லிம்களுக்கு எதிராகவோ, முஸ்லிம் மதத்தை சுட்டி பதிவிட்டாலோ, மத துவேஷ பேச்சுக்களை பேசினாலோ அவர்கள் மீதான தண்டனை கடுமையாக இருக்கும் என்பதாகவும் எச்சரிக்கைகள் தொடங்கின.

இதுவரை அமைதியாக இருந்த அரேபியர் இப்போது இந்திய முஸ்லிம்களுக்கு எதிராக என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து விட்டனர். என்பதை அறிந்த பிரதமர் மோடி உடனே “முஸ்லிம்கள் யாரும் இந்தியாவில் கொடுமைப்படுத்தப் படவில்லை, கொரோனாவுக்கு மதமில்லை, அனைவரும் இணைந்து அதனை எதிர்க்க வேண்டும்” என்பதாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

மேலும் அரபு நாட்டில் வசிக்கும் இந்துத்வா சிந்தனையாளர்களின் சமூக வலைதள பதிவுகள் தோண்டி எடுக்கப்பட்டு ஒவ்வொருவராக அடையாளம் காணப்படும் நிலை உருவானது. இஸ்லாமிய எதிர்ப்பு பதிவுகள் பதிந்தவர்கள் பலர் கைது செய்யபட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம், மஸ்கட், கத்தார் உள்ளிட்ட நாடுகளின் இந்திய தூதரகம், இந்தியாவுக்கும், அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவை சுட்டிக்காட்டி இந்த உறவு தொடர வேண்டும் என்பதாகவும், மத துவேஷ பதிவுகளுக்கும் பேச்சுக்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக எச்சரிக்கை விடுக்கும் வகையில் சமூக வலைதளங்கலில் பதிவிட்டு இருந்தனர்.

இதனை தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரக இளவரசி ஹிந்த் அல் காசிமி சமீபத்தில் பல்வேறு இந்திய ஊடங்களுக்கு பேட்டி அளித்தும் வருகிறார். அந்த வகையில் டெலிகிராப் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் அரசியல் வாதி அல்ல. ஆனால் எனக்கு இந்தியாவை ரொம்ப பிடிக்கும் அங்குள்ள மக்களையும் ரொம்ப பிடிக்கும். ஆனால் சிலர் நான் பார்த்த இந்தியர்கள் இல்லை. அவர்களின் பேச்சுக்களும் எழுத்துக்களும் இவர்கள் இந்தியர்கள் தானா? என்று கேள்வி எழுகின்றன.

எங்கள் மதத்தை, எங்கள் இனத்தை, எங்கள் வழிகாட்டியான இறைவனின் தூதுவரை, எங்கள் நிலத்தை எப்படி அவர்களால் இழிவாக பேச முடிகிறது. இதனை பார்த்து என்னால் எப்படி அமைதியாக இருக்க முடியும்? அதனால்தான் என் கருத்தையும், என் எதிர்ப்பையும் தெரிவித்தேன்.

என்னுடன் படித்த பல இந்திய தோழிகள் உள்ளனர். அவர்கள்தான் இந்தியர்கள் எப்படி என்பதை காட்டினார்கள், இந்து மதம் எப்படிப் பட்ட அமைதியான மதம் என்பதையும் அவர்களது நடவடிக்கையால் தெரிந்து கொண்டுள்ளேன். இந்திய பண்பாடு மிகச் சிறந்த பண்பாடு. ஆனால் சிலர் நான் பார்த்த இந்தியர்கள் அல்ல.அவர்களின் எழுத்துக்களும் பேச்சுக்களும் இவர்கள் இந்தியர்கள்தானா? என்று கேள்வி எழுப்புகிறது.

இனியும் இன்னொரு ஹிட்லர் வேண்டாம். இன்னொரு மகாத்மா காந்தி, நெல்சன் மண்டேலா, மார்டின் லூதர் கிங் ஆகியோரே இன்றை முக்கிய தேவை” என்று ஹிந்த் அல் காசிமி தெரிவித்துள்ளார்.


Share this News:

Leave a Reply