சென்னை (14 அக் 2020): நடிகர் ரஜினிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு ரூபாய் 6.50 லட்சம் சொத்து வரி செலுத்தக்கூறி சென்னை மாநகராட்சி, நடிகர் ரஜினிகாந்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. மாநகராட்சியின் நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த் முன்பு இன்று (14/10/2020) விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பிய 10 நாட்களுக்குள் வழக்கு தொடர்ந்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாகக் கூறிய நீதிபதி ரஜினிகாந்த் தரப்புக்கு கண்டனம் தெரிவித்தார்.
மேலும், அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரிக்கை விடுத்தார். வழக்கை வாபஸ் பெற அனுமதி கோரி மனுத்தாக்கல் செய்ய ரஜினிகாந்த் தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு விதிக்கப்பட்ட சொத்து வரிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற ரஜினிகாந்த் தரப்பு பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது.