மும்பை (27 நவ 2022): ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக இருக்கிறார்கள் என்று பாபா ராம் தேவ் கூறிய கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தானேவில் நடைபெற்ற யோகா முகாமில் பங்கேற்ற ராம்தேவ் அங்கு பங்கேற்றிருந்த பெண்களை பார்த்து பெண்கள் குறித்து கருத்து தெரிவித்தார் “பெண்கள் புடவை மற்றும் சல்வார்களில் அழகாக இருக்கிறார்கள், பெண்கள் எதிலும் அழகாக இருக்கிறார்கள்” என்று ராம்தேவ் தெரிவித்தார்.
மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவி அம்ரிதா ஃபட்னாவிஸ் மற்றும் முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் எம்பி ஸ்ரீகாந்த் ஷிண்டே ஆகியோர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ராம்தேவ் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார்.
இந்நிலையில் ராம்தேவின் கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால் ராம்தேவை கடுமையாக விமர்சித்தார். பெண்களை இழிவுபடுத்தியதற்காக ராம்தேவ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஸ்வாதி கேட்டுக் கொண்டார் – “மகாராஷ்டிர துணை முதல்வரின் மனைவி முன் ராம்தேவ் கூறியது மோசமானது மற்றும் கண்டனத்திற்குரியது. இந்த அறிக்கை அனைத்து பெண்களையும் புண்படுத்தியுள்ளது. பாபா ராதேவ் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று ஸ்வாதி மாலிவால் ட்வீட் செய்துள்ளார்.
சிவசேனா உத்தவ் பக்ஷா தலைவர் சஞ்சய் ராவத், ராம்தேவ் இந்த கருத்தை கூறியபோது அமிர்தா ஃபட்னாவிஸ் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ளார். சிவாஜிக்கு எதிராக கவர்னர் தரக்குறைவான கருத்துக்களை கூறும்போதும், மகாராஷ்டிராவின் கிராமங்களை கர்நாடகாவுக்கு கொண்டு செல்வதாக கர்நாடக முதல்வர் மிரட்டும் போதும், பா.ஜ.க பிரசாரகர் ராம்தேவ் பெண்களை இழிவுபடுத்தும் போதும் அரசு அமைதியாக இருக்கிறது. டெல்லிக்கு அரசு நாக்கை அடகு வைத்திருக்கிறதா என்றும் சஞ்சய் ராவத் கேள்வி எழுப்பினார்.