புதுடெல்லி (20 ஜன 2022): வடகிழக்கு டெல்லியில் பிப்ரவரி 2020 கலவரத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் முதல் தண்டனை அறிவிக்கப்பட்டது.
தினேஷ் யாதவ் என்பவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 73 வயது மூதாட்டியின் வீட்டைக் கொள்ளையடித்து பின்பு அந்த வீட்டை எரித்ததற்காகவும், கலவரத்துக்குத் தலைமை தாங்கியதற்காகவும் தினேஷ் யாதவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது.
கோகுல்புரியில் உள்ள பகீரதி விஹாரில் வசிக்கும் 73 வயதான மனோரி என்பவரின் வீடு தினேஷ் யாதவால் தீக்கிரையாக்கப்பட்டது. பிப்ரவரி 25, 2020 அன்று, சுமார் 200 கலகக்காரர்கள் தனது வீட்டைக் கொள்ளையடித்து தீ வைத்தனர் என்று மூதாட்டி அளித்த வாக்குமூலம் மற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களை நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டது.
இதன் அடிப்படையில் தினேஷ் யாதவுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.