லக்னோ (16 மே 2020): அரசின் மெத்தனத்தால் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மரணம் அதிகரித்துக் கொண்டே போகின்றன. அந்த வகையில் இன்று (சனிக்கிழமை) 24 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை எதுவும் எடுக்காமல் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால், வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்தஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
அவர்களை தங்கள் மாநிலத்திற்கு அழைத்து செல்ல மத்திய அரசு சார்பில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறபோதும், கட்டணம் ஏழை மக்களால் அந்த கட்டணத்தில் பயணம் மேற்கொள்ள முடியாத சூழல் உள்ளது. எனினும் பல தொழிலாளர்கள் நடந்தும், வழியில் செல்லும் லாரிகளிலும் பயணம் மேற்கொள்கின்றனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் இருந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல, லாரியில் மொத்தமாக பயணித்தனர். அவர்களை ஏற்றி வந்த லாரி, உ.பி., மாநிலம் ஆரையா பகுதியில் வந்தபோது, எதிரே வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 24 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.