பாட்னா (02 நவ 2020): பா.ஜ.க. கூட்டணியிலிருந்து நிதிஷ் குமார் விரைவில் விலகுவார் என்று லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வான் கூறியுள்ளார்.
பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்ற தேர்தலுக்கு மத்தியில் மறைந்த ராம்விலாஸ் பாஸ்வானின் மகனும், லோக் ஜனசக்தி கட்சியை சேர்ந்தவருமான சிராக் பாஸ்வான், நேற்று செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர், பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் நேரத்துக்கு நேரம் தன் நிலையை மாற்றும் மனநிலை கொண்டவர். ஏற்கெனவே முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்துடன் இணைந்து பா.ஜ.க.வை எதிர்த்த நிதிஷ், பின்னர் அதே பா.ஜ.க. கூட்டணியில் இணைந்ததார்.
இதேபோல், சட்டசபை தேர்தலுக்கு பிறகு நிதிஷ்குமார் ராஷ்டிரிய ஜனதாதளம் தலைமையிலான மெகா கூட்டணியில் சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிக்கலாம் என்று தெரிவித்தார். மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் தன்னை பிரதமர் வேட்பாளராக காட்டிக்கொள்ள பிரதமர் மோடிக்கு எதிராகவும் நிதிஷ்குமார் களமிறங்கலாம் என்றும் சிராக் பாஸ்வான் அப்போது கூறினார்.