கொல்கத்தா (26 மார்ச் 2020): மேற்கு வங்கத்தில் பால் வாங்க வெளியில் சென்றவர் போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தற்போது உலகத்திற்கே அச்சுறுத்தலாக உருமாறியுள்ளது. இதுவரை இந்தியாவில் 681 பேர் இந்த வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 13 பேர் பலியாகியுள்ளனர்.
மேலும் கொரோனா பரவுவதைத் தடுக்கும் பொருட்டு செவ்வாய் நள்ளிரவு முதல் வரும் ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை மீறும் நபர்கள் மீது போலீசார் ஆங்காங்கே தடியடி நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மேற்கு வங்கத்தின் ஹவுரா மாவட்டத்தில் பால் வாங்கச் சென்ற லால் ஸ்வாமி (32) என்ற இளைஞர் போலீசார் தாக்குதலில் மரணமடைந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த இளைஞர் புதன் மாலை வீட்டிலில் இருந்து புறப்பட்டு பால் வாங்கச் சென்றார் என்றும், அப்போது அங்கே போலீசார் நடத்திய தடியடியில் அவர் காயம்பட்டு வீட்டிற்கு வந்து, உடல் நலம் இன்றி இருந்ததாகவும், பின்னர் மருத்துவமனை கொண்டு செல்லும் போது உயிரிழந்ததாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ள்னர்.
ஆனால் இதனை போலீசார் மறுத்துள்ளனர். அவர் உடல் நலக்குறைவாலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இவ்விவகாரம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.