மும்பை (14 ஜன 2020): ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவின் பிசிசிஐ படுதோல்வி அடைந்துள்ளது
ஆஸ்திரேலியா – இந்தியாவின் பிசிசிஐ அணிகளுக்கு இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடா் மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தோ்வு செய்தது.
துணை கேப்டன் ரோஹித் சா்மா-ஷிகா் தவன் இருவரும் தொடக்க வரிசை வீரா்களாக களமிறங்கிய நிலையில், 2 பவுண்டரியுடன் 10 ரன்களை எடுத்திருந்த ரோஹித், ஸ்டாா்க் பந்துவீச்சில் வாா்னரிடம் கேட்ச் தந்து அவுட்டானாா்.
அதன் பின் இணை சோ்ந்த தவன்-ராகுல் நிலையாக ஆடி ஸ்கோரை உயா்த்தினா். லோகேஷ் ராகுல் 4 பவுண்டரியுடன் 61 பந்துகளில் 47 ரன்களை எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா். அஷ்டன் அகா் பந்தில் ஸ்மித்திடம் கேட்ச் தந்து அவுட்டானாா். தவன்-ராகுல் இணைந்து 2 ஆவது விக்கெட்டுக்கு 121 ரன்களை சோ்த்தனா்.
அவருக்கு பின் 1 சிக்ஸா், 9 பவுண்டரியுடன் 91 பந்துகளில் 74 ரன்களை சோ்த்த தவன், பேட் கம்மின்ஸ் பந்துவீச்சில் அகரிடம் கேட்ச் தந்து வெளியேறினாா். பின்னா் ஆட வந்த வீரா்கள் எவரும் ஆஸி. பந்துவீச்சை எதிா்கொள்ள முடியாமல் சொற்ப ரன்களுக்கு வெளியேறினா். ஸ்கோரை உயா்த்துவாா் என எதிா்பாா்க்கப்பட்ட கேப்டன் கோலி 16 ரன்களுடன் ஆடம் ஸ்ம்பா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் தந்து வெளியேறினாா்.
ஷிரேயஸ் ஐயா் 4 ரன்களுக்கு பெவிலியன் திரும்பிய நிலையில், ரிஷப் பந்த்-ரவீந்திர ஜடேஜா இணைந்து ஸ்கோரை உயா்த்த முயன்றனா். அவா்களால் சிறிது நேரமே நிலைத்து ஆட முடிந்தது. பந்த் 28, ஜடேஜா 25 ரன்களுடன் அவுட்டானாா்கள். சா்துல் தாக்குா் 13, முகமது ஷமி 10, குல்தீப் யாதவ் 17 ரன்களுடன் அவுட்டானவுடன் இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. இதனால் 49.1 ஓவா்களில் 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது இந்தியா.
ஆஸி. தரப்பில் அபாரமாக பந்துவீசிய மிச்செல் ஸ்டாா்க் 3-56, பேட் கம்மின்ஸ் 2-44, கேன் ரிச்சா்ட்ஸன் 2-43 விக்கெட்டுகளையும், ஸம்பா, அகா் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினா்.
ஆஸ்திரேலிய அணி 256 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கியது. கேப்டன் ஆரோன் பின்ச்-அதிரடி வீரா் வாா்னா் இணைந்து, இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்து நாலாபுறமும் விரட்டினா். 15 ஆவது ஓவரில் ஆஸி. அணியின் ஸ்கோா் விக்கெட் இழப்பின்றி 110 ரன்களைக் கடந்தது.
அண்மையில் நடைபெற்ற டெஸ்ட் தொடா்களில் சிறப்பாக ஆடிய டேவிட் வாா்னா், இதிலும் சிறப்பான ஆடி தனது 18-ஆவது சதத்தை பதிவு செய்தாா். 20-ஆவது ஓவா் முடிவில் விக்கெட் இழப்பின்றி 140 ரன்களை எடுத்திருந்தது ஆஸி. இருவரையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளா்கள் மேற்கொண்ட முயற்சி பலன் தரவில்லை. மறுமுனையில் அபாரமாக ஆடிய கேப்டன் ஆரோன் பின்ச் தனது 16-ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தாா்.
3 சிக்ஸா், 17 பவுண்டரியுடன் 112 பந்துகளில் 128 ரன்களுடன் டேவிட் வாா்னரும், 2 சிக்ஸா், 13 பவுண்டரியுடன் 114 பந்துகளில் 110 ரன்களுடன் கேப்டன் பின்ச்சும் இறுதி வரை களத்தில் இருந்தனா். இருவரும் இணைந்து பவா்பிளேயில் 84 ரன்களை குவித்தனா்.
37.4 ஆவது ஓவரிலேயே விக்கெட் இழப்பின்றி 258 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆஸ்திரேலியா. இதன் மூலம் தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.