தஞ்சாவூர் (16 ஜன 2020): தஞ்சாவூர் அருகே கார் மோதியதில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தஞ்சாவூர் அருகே வல்லம் புதூர் பகுதியில் ஜெபக்கூடம் உள்ளது. இதில், பொங்கல் திருநாளையொட்டி புதன்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஏராளமானோர் வல்லம்புதூரிலுள்ள குளத்தில் குளித்துவிட்டு, பின்னர் தஞ்சாவூர் – திருச்சி முதன்மை சாலையிலுள்ள அணுகு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த கார் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பெங்களூரு நேதாஜி நகரைச் சேர்ந்த கவிதா (25) உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், பெங்களூரு நேதாஜி நகரைச் சேர்ந்த செல்வி (45), இவரது மகள் கீர்த்தி, கன்னியம்மாள் (48) ஜோதி, காரை ஓட்டி வந்த திண்டுக்கல் மாவட்டம் திருநகரைச் சேர்ந்த ஆர். சத்தியநாராயணன் (42), காரில் பயணம் செய்த இவரது தந்தை ராமச்சந்திரன், தாய் ரேவதி ஆகிய 7 பேர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு செல்வி, கீர்த்தி, கன்னியம்மாள் ஆகியோர் உயிரிழந்தனர். இதுகுறித்து வல்லம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.