திருச்சிக்கு வந்த பயணி விமானத்தில் நடு வானில் மரணம்!

Share this News:

திருச்சி (09 மார்ச் 2020): மலேசியாவிலிருந்து திருச்சிக்கு வந்த பயணி ஒருவர் விமானத்தில் நடு வானில் உயிரிழந்துள்ளார்.

மலேசியாவில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.30 மணிக்கு தனியார் விமானம் புறப்பட்டு வந்தது. அதில் 180 பயணிகள் பயணித்தனர். கொரோனா வைரஸ் உஷார் நடவடிக்கையாக விமானத்தில் பயணித்த அனைத்து பயணிகளுக்கும் முகக்கவசம் அணிவிக்கப்பட்டிருந்தது.

விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்தில் விமானத்தில் இருந்த மலேசியா கோலாலம்பூர் சுபங்ஜெயா பகுதியை சேர்ந்த சென்னையா (வயது 65) என்ற பயணி தனக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக விமான பணிப்பெண்களிடம் தெரிவித்தார்.

உடனே விமானத்தில் பயணித்த டாக்டர் மற்றும் பணிப்பெண்கள் சென்னையாவுக்கு அணிவிக்கப்பட்டிருந்த முகக்கவசத்தை கழற்றி அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் சென்னையாவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். ஆனால் விமானம் திருச்சியை நெருங்குவதற்குள் நடுவானிலேயே சென்னையா பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அவர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மாரடைப்பால் இறந்தாலும், கொரோனா நோய் பீதி காரணமாக பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது. அவர்களை விமானிகள் மற்றும் பணிப் பெண்கள் அமைதிப்படுத்தினர்.

இன்று காலை 8.30 மணிக்கு விமானம் திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கியது. அதன்பிறகு சென்னையாவின் உடல் விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு ஆம்புலன்ஸ முலம் திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாரடைப்பால் இறந்திருந்தாலும் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா? என்று ஆய்வு செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

பிரேத பரிசோதனை முடிவில் அவரது மரணத்திற்கான காரணம் தெரிய வரும். இதற்கிடையே சென்னையாவுடன் பயணம் செய்த பயணிகள் திருச்சி விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

விமானத்தில் இறந்த சென்னையா மலேசியாவில் இருந்து திருச்சிக்கு வந்தவர் ஆவார். அவர் தனியாக வந்துள்ளார். அவருடன் சூட்கேஸ், கைப்பை இருந்துள்ளது. அதை போலீசார் மற்றும் அதிகாரிகள் பாதுகாப்பாக எடுத்து வைத்துள்ளனர். சென்னையா மரணம் குறித்து மலேசியாவில் உள்ள அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் முலம் திருச்சியில் உள்ள உறவினர்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.

மலேசியாவில் இருந்து திருச்சி வந்த பயணி திடீ ரென இறந்த சம்பவம் விமான நிலைய ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது.


Share this News:

Leave a Reply