பீஜிங் (25 ஜன 2020): சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41-ஆக அதிகரித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது.
தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 830ஆக உயர்ந்துள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.
இதனால், சீனாவில் 5 முக்கிய நகரங்கள் ஸ்தம்பித்ததோடு, 13 நகரங்களுக்கான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. ரயில், விமான நிலையங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் உள்ளிட்டவை செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது.உ
தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திரளான மாணவர்கள் சீன கல்வி நிறுவனங்களில் பயின்று வருகின்றனர். இவர்களின் நிலை குறித்து இந்திய தூதரக அதிகாரிகள் மாணவர்களிடம் தொடர்பு கொண்டு பேசியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே கொரோனா வைரஸ் தாக்குதலால் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளதாக சனிக்கிழமை அந்நாடு தெரிவித்துள்ளது.