தைபே (16 டிச 2022): தைவானில் அடிக்கடி நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. நேற்று அங்கு கிழக்கு கடலோரப்பகுதியில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நில நடுக்கம் 12 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்தது.
பொதுவாக 6 புள்ளிகளுக்கு மேற்பட்ட நில நடுக்கங்கள் ஆபத்தானவை என்றபோதிலும், அது எங்கு தாக்குகிறது, எந்தளவு ஆழத்தில் மையம் கொள்கிறது என்பதைப் பொறுத்தது.
நேற்றைய நில நடுக்கத்தால் தைவான் தலைநகர் தைபே குலுங்கியது. கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் பீதியில் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்ட கட்டிடங்களை விட்டு வெளியேறி வீதிகளில், திறந்தவெளி மைதானங்களில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.