திருச்சூர் (16 ஜன2020): கேரள மாநிலத்தில் 54 வயது பெண்மணி இரட்டைக் குழந்தைகளுக்கு தாயாகி மகிழ்ச்சியின் உச்சத்தில் உள்ளார்.
கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலோரைச் சேர்ந்த லலிதா என்பருக்குத்தான் இந்த மகிழ்ச்சியான தருணம் அமைந்துள்ளது. லலிதா -மணி தம்பதியினருக்கு இருந்த ஒரே ஒரு மகன் கோபிகுட்டன் கடந்த 2017 ஆம் ஆண்டு விபத்தில் பலியானார். இதனால் இருவரும் துயரத்தின் எல்லைக்கு சென்றனர்.
எனினும் லலிதா மீண்டும் குழ்ந்தை பெற்றுக் கொள்ள விரும்பினார். ஆனால் அவரது வயது அதற்கு ஒத்துழைக்காது என்பதை மருத்துவர்கள் தெரிவித்தனர். எனினும் மருத்துவர் கிருஷ்ணன் குட்டி இந்த சவாலான முயற்சியில் இறங்கினார். அவரது முயற்சி வீண் போகவில்லை. லலிதா கர்ப்பமானார். 54 வயதில் கர்ப்பமாவது அபூர்வம் என்றாலும், ஏற்கனவே பல பிரசவங்கள் இதே வயதில் நடந்துள்ளதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர்.
இதனை அடுத்து மிகவும் கவனமாக மருத்துவர்களின் அறிவுரைப்படி இருந்து வந்த லலிதா கடந்த நவம்பர் 2, 2019 திருச்சூர் மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். சுமார் ஒன்றரை மாதங்கள் மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த லலிதாவுக்கு டிசம்பர் 17 ஆம்தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன.
தற்போது மகிழ்ச்சியின் வெள்ளத்தில் உள்ளனர் லலிதா மணி தம்பதியினர்.