புதுடெல்லி (03 மே 2020): நலிந்த நிலையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு உதவிட தொடங்கப்பட்டுள்ள நலநிதிக்கு முன்னாள் கேப்டன் அசாருதீன் உள்ளிட்டோர் நிதி அளிக்க முன்வந்துள்ளனர்.
‘கொரோனா பாதிப்பு காரணமாக பலர் தங்கள் வாழ்வாதரங்களை இழந்துள்ளனர். அந்தப் பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர். இவர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (ஐசிஏ) சார்பில் நலிந்த நிலையில் உள்ள முன்னாள் வீரர்களுக்கு நிதி உதவி செய்ய முடிவு செய்யப்பட்டது. ஐசிஏ சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு உதவிட வாய்ப்பு, வசதியுள்ள வீரர்கள் நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும்’ என சங்கத்தின் தலைவர் அசோக் மல்கோத்ரா கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், முன்னாள் வீரர் ராஜேந்திரசிங் தலா ₹1 லட்சம் வழங்க உறுதி அளித்துள்ளனர். சாந்தா ரங்கசாமி, அஞ்சுமன் கெய்க்வாட் விரைவில் நிதி அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
எனினும், முன்னணி வீரர்கள், பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்கள் இதுவரை நிதி உதவி செய்வது குறித்து அறிவிக்கவில்லை.