சென்னை (14 ஜன 2020): தமிழக காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக வெளியிட்ட அறிக்கையால் சோனியா காந்தி எரிச்சல் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியும், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் கே.ஆா்.ராமசாமியும் கூட்டறிக்கை வெளியிட்டிருந்தனர். அதில் திமுகவை கடுமையாக சாடியிருந்தனர்.
இவ்விவகாரம் டெல்லியில் பெருமளவில் பிரதிபலித்தது. இதனாலேயே குடியுரிமை சட்டம் தொடர்பான காங்கிரஸ் கூட்டத்தில் திமுக கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதனை அடுத்து இன்று டெல்லியில் இதனால் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரியை சோனியா காந்தி சந்தித்து பேசினார். இதில் சோனியா காந்தி தமிழக காங்கிரஸ் மீது கடுமையான விமர்சனங்களை வைத்ததாக கூறப்படுகிறது. திமுகவுடன் சமாதானமாக செல்லுங்கள். சண்டை வேண்டாம் என்று சோனியா காந்தி அறிவுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக உடனடியாக ஸ்டாலினிடம் பேசி சமாதானம் ஆகுங்கள். நானும் ஸ்டாலினுடன் பேசுகிறேன் என்று சோனியா காந்தி கூறியுள்ளார். அதேபோல் திமுகவுடன் பிரச்சனை இருந்தால் பேசி தீருங்கள், தேவையில்லாமல், அறிக்கை எல்லாம் வெளியிட வேண்டாம் என்று சோனியா அறிவுரை வழங்கி உள்ளார்.
இதன் பின்தான் கே.எஸ் அழகிரி, திமுக உடன் சண்டை இல்லை. கூட்டணி தொடரும் என்று பேட்டி அளித்தார். ஆனால் இன்னும் திமுக இதில் சமாதானம் ஆகவில்லை என்று கூறுகிறார்கள்.
அதேவேளை ஸ்டாலின் மற்றும் திமுக தலைவர்கள் காங்கிரஸின் அறிக்கையால் இதுவரை சமாதானம் அடைந்ததாக தெரியவில்லை.