பீஜிங் (24 ஜன 2020): சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், பீஜிங், ஷாங்காய் போன்ற சீன நகரங்களில் மட்டுமின்றி அமெரிக்கா, தென்கொரியா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளிலும் பரவி வருகிறது.
தொடர்ந்து, முதன்முதலில் கொரோனா கண்டறியப்பட்ட மத்திய நகரமான வுஹானில் வைரஸ் பாதிப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ள 1,072 பேரையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக சீன தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 830ஆக உயர்ந்துள்ளது என சீன அரசு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு நிலைமையை உலகளாவிய சுகாதார அவசரநிலை என்று அறிவிப்பதை நிறுத்திய சில மணிநேரங்களுக்குப் பிறகு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டுவரும் விதமாக வுஹான் உட்பட ஐந்து நகரங்களை சீனா நேற்று முடக்கியுள்ளது. அந்த பகுதிகளுக்கான அனைத்து போக்குவரத்து சேவையையும் முற்றிலும் முடக்கியுள்ளது. இதன்மூலம் 2 கோடி மக்களை சீன அரசு தனிமைப்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் மட்டும் 8 பேர் இந்த வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்துள்ளதாகவும், மேலும் நாடு முழுவதும் புதிதாக வைரஸ் பாதிப்புக்கு 259 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்ட 830 பேரில் 177 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.